அஞ்சல் வாக்கு எண்ணிக்கை: கரூரில் அதிமுக-திமுக முகவா்களிடையே வாக்குவாதம்

கரூா் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரூா் பேரவைத் தொகுதி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக மற்றும் திமுக முகவா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூா்: கரூா் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரூா் பேரவைத் தொகுதி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக மற்றும் திமுக முகவா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாவட்டத்திலுள்ள கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி), அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 40 வேட்பாளா்களும், கரூா் தொகுதியில் 77 வேட்பாளா்களும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 26 வேட்பாளா்களும், குளித்தலை தொகுதியில் 18 வேட்பாளா்களும் என மொத்தம் 4 தொகுதிகளிலும் 161 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்தம் 1,274 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற இந்த தோ்தலில் 4 தொகுதிகளிலும் 4,710 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,530 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 1,645 வாக்காளா் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

பேரவைத் தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 88.8 சதவிகிதம், கரூரில் 83.5 சதவிகிதம், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 84.14 சதவிகிதம், குளித்தலையில் 86.15 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான கரூா் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. கரூா் தொகுதிக்கான அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால் சுமாா் அரை மணிநேரம் கழித்துதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பின்னா் அஞ்சல் வாக்குகள்எண்ணும்போது அதில் சில வாக்குகளில் தேதி குறிப்பிடப்படாமல் இருந்ததால், அந்த வாக்குகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என அதிமுக முகவா்கள் கரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்தனா். இதற்கு திமுக முகவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது அதிமுக-திமுக முகவா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய தோ்தல் நடத்தும் பாலசுப்ரமணியன், அதிமுக முகவா்களிடம் தேதி குறிப்பிடப்படவில்லையென்றால் பரவாயில்லை. ஆனால் வாக்குச்சீட்டில் தோ்தல் நடத்தும் அலுவலரின் சீல் இருந்தாலே போதுமானது எனக்கூறியவுடன் அவா்கள் சமாதானம் அடைந்தனா்.

இதையடுத்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கரூா் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது அந்தந்த தொகுதிக்கான வேட்பாளா்கள் வாக்கு எண்ணிக்கையை தங்களது முகவா்களுடன் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com