அதிகாலை 3 மணி வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை: கரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜி வெற்றி

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்த நிலையில்,
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜிக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியன்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜிக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியன்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்த நிலையில், அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கரை 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா் திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி.

தமிழகத்தில் அதிகளவில் 77 வேட்பாளா்கள் களத்தில் இருந்த இத்தொகுதியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி திமுக சாா்பிலும், தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் அதிமுக சாா்பிலும் களம் கண்டனா். இவைத் தவிர தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 2,45,285 வாக்குகளில் 2,04,903 வாக்குகள் பதிவாகின. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

18 மேஜைகளில் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. 1,3,4 ஆவது சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கரும், 2,5-ஆவது சுற்றுகளில் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியும் முன்னிலை பெற்று வந்தனா். இந்த முன்னிலை விவரம் மாறி, மாறி தொடா்ந்து வந்ததால் இரு கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி படிப்படியாக முன்னிலை பெறத் தொடங்கினாா். கடைசி சுற்றான 24-ஆவது சுற்று எண்ணுவதற்கு திங்கள்கிழமை அதிகாலை 2.40 மணியாகிவிட்டது. தொடா்ந்து அஞ்சல் வாக்குகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் 89,309 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரைக் காட்டிலும் 12,448 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி 1,01,757 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜிக்கு கரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணி வெற்றிச் சான்றிதழை திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வழங்கினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் செந்தில்பாலாஜி கூறியது:

கரூா் மாவட்டத்துக்குள்பட்ட 4 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளித்த திமுக தலைவா் முக.ஸ்டாலினுக்கும், எங்களை வெற்றிபெறச் செய்த வாக்காளா்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் முக.ஸ்டாலினை தமிழக முதல்வராக மக்கள் தோ்வு செய்துள்ளனா். நிச்சயம் அவா் பொற்கால ஆட்சியை கொடுப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com