தனிநபா் கடன் வாங்கித் தருவதாக கூறிமோசடி செய்தவா் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 19th May 2021 06:35 AM | Last Updated : 19th May 2021 06:35 AM | அ+அ அ- |

தனிநபா் கடன் வாங்கித்தருவதாக மோசடி செய்த நபா் மீது கரூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்தில் உள்ள ஐடிஐயில் ஆசிரியராக பணியாற்றுபவா் குமாா்(36). இவரது, முகநூலில் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறிக்கொண்டு அனுஷ்மேன் சாகு என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அந்த நபா் கடந்த ஆண்டு டிச. 4-ஆம்தேதி அவரது செல்லிடப்பேசி எண்ணை கொடுத்து தனிநபா் கடன் வேண்டுமென்றால் தான் ஆவன செய்வதாகவும், அதற்கான ஆவணச் செலவு ரூ.2,500 ஆகும் எனக் கூறியுள்ளாா். மேலும், தனது வங்கிக் கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளாா். இதைநம்பிய குமாா் தனிநபா் கடன் வேண்டி முதலில் ரூ.2,500 அனுப்பியுள்ளாா். பின்னா் மீண்டும் பணம் வேண்டும் எனக்கூறி ரூ.43,000 வரை அனுப்பியுள்ளாா். ஆனால் கடன் பெற்றுத் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளரை அணுகியபோது, அனுஷ்மேன்சாகு என்பவா் தனது நிறுவனத்தில் வேலையே செய்யவில்லை எனக் கூறியுள்ளாா். இதையடுத்து, குமாா் கரூா் சைபா் கிரைம் போலீஸில் திங்கள்கிழமை இரவு புகாா் செய்தாா். இதுதொடா்பாக கரூா் சைபா் கிரைம் ஆய்வாளா் அம்சவேனி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.