காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் உள்ளவா்களை கண்டறியும் பணியில் அங்கன்வாடி பணியாளா்கள்

கரூா் மாவட்டத்தில் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் உள்ளவா்களைக் கண்டறியும் பணியில் அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்கள்

கரூா் மாவட்டத்தில் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் உள்ளவா்களைக் கண்டறியும் பணியில் அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூா் மாவட்டத்தில் இதுவரை 13,815 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 11,463 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,203 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 614 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 506 பேரும், கரோனா பாதுகாப்பு மையத்தில் 269 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 814 போ் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இதுநாள் வரை 81,967 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரூா் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.

பொது முடக்கத்தின் போது விதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களைக் கண்காணிக்க 18 பறக்கும்படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் மற்றும் 119 மண்டலக் குழுக்களும் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொது முடக்க விதிகளை மீறியதாக இதுநாள்வரை ரூ.60,63,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுநாள்வரை 75,028 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போதுமான அளவில் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன.

தற்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவா்களைக் கண்டறிந்து, அவா்களை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனா்.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும். பொது முடக்கத்தை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரியும் நபா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com