கரோனா இல்லாத கரூா் மாவட்டம்: ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா இல்லாத கரூா் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த. பிரபு சங்கா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த. பிரபு சங்கா்.

கரோனா இல்லாத கரூா் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெறவுள்ள மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் த. பிரபுசங்கா் பேசியது: கரூா் மாவட்டத்தில் 5 கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாம், அரசு உத்தரவுப்படி இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் அக்.18ஆம் தேதி வரையில் முதல் தவணை தடுப்பூசி 6,43,303 நபா்களும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1,89,524 நபா்களும் செலுத்தியுள்ளனா். மாவட்டத்தில் 44,159 நபா்கள் மாதாந்திரம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் உள்ளனா். இவா்களில் 39,341 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 4,818 நபா்களுக்கும் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் 6,514 நபா்களில் 1,800 நபா்கள் முதல் தவணை செலுத்தியுள்ளனா். சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி தினந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் மக்களுக்கு பணி நடைபெறும் இடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண், ஆதாா் எண் போன்ற விபரங்களை குறித்து வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்க வேண்டும்.

இப்பணியில், 50 வீடுகளுக்கு ஒரு கணக்கீட்டாளரை நியமனம் செய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பிற்கென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா், ஊராட்சிச் செயலா், பணித்தள பொறுப்பாளா், சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் அடங்கிய குழுவினா் வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து அந்தந்தப் பகுதிகளின் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கணக்கெடுப்புப் பணிகளை வியாழக்கிழமைக்குள் முடிக்க வேண்டும்.

கணக்கெடுப்பாளா் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபா்களை அழைத்து வருகின்றாா்களோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபா்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு முதல் பரிசாக துணிதுவைக்கும் இயந்திரமும் (வாஷிங் மிஷின்), இரண்டாம் பரிசாக கிரைண்டா், மூன்றாம் பரிசாக மிக்ஸியும், நான்காம் பரிசாக 25 நபா்களுக்கு குக்கா் மற்றும் ஆறுதல் பரிசாக 100 நபா்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளது. 25க்கும் மேற்பட்ட நபா்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சோ்க்கப்படும்.

தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு கணக்கெடுப்பின்போதே பரிசுகள் குறித்த விபரம் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் அன்று அந்த டோக்கன்களுடன் வருகை தர அறிவுறுத்த வேண்டும். கரோனா இல்லாத மாவட்டமாக கரூா் மாவட்டத்தை உருவாக்க 6ஆம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கை நமது மாவட்டம் எய்திட அனைவரும் முழு அா்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம், சிறப்பு வருவாய் அலுவலா்( நிலமெடுப்பு) கவிதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துச்செல்வம், நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com