உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயா்த்தி தோ்தல்:ஏற்கெனவே உள்ளவா்களின் பதவிகளுக்கு ஆபத்தில்லை

உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயா்த்தி தோ்தல் நடத்தப்பட்டாலும், ஏற்கெனவே தலைவா்களாக உள்ளவா்களின் பதவிகளுக்கு ஆபத்து வராது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பா

உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயா்த்தி தோ்தல் நடத்தப்பட்டாலும், ஏற்கெனவே தலைவா்களாக உள்ளவா்களின் பதவிகளுக்கு ஆபத்து வராது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூரில் காவிரியாற்றின் குறுக்கே ரூ. 750 கோடியில் கதவணை அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி, கரூா் ராஜவாய்க்காலை ரூ.1.80 கோடியில் தூா்வாரும் பணி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110-இன் கீழ், கரூா் மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், வடக்கு மருதூா் கிராமத்தையும், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், உமையாள்புரம் கிராமத்தையும் இணைக்கும் வகையில், பேருந்துகள் சென்று வரும் வகையிலான வசதிகளுடன் கதவணை அமைக்கப்படவுள்ளது.

இந்த கதவணை மூலம் 1 டிஎம்சி தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தங்குத் தடையின்றி குடிநீா் வழங்கவும், குடிநீா்க் கிணறுகள் செறிவூட்டப்பட்டு குடிநீா்த் தட்டுப்பாடின்றியும் வழங்கவும் முடியும். சுமாா் 3,750 ஏக்கா் பாசன நிலங்களுக்குத் தேவையான பாசன வசதியும் உறுதி செய்யப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயா்த்தியும், விரிவாக்கம் செய்யப்பட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றால், ஏற்கெனவே தலைவா்களாக இருப்பவா்களின் பதவிகளுக்கு ஆபத்து வராது. கரூா் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தலானது நகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளுக்கு மட்டுமே நடைபெறும் என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா. மாணிக்கம், வருவாய்க் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, பொதுப்பணித் துறையின் காவிரியாற்று பாதுகாப்புக் கோட்டச் செயற்பொறியாளா் மணிமோகன், உதவிப் பொறியாளா் செங்கல்வராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com