கரூா் மாநகராட்சி கட்டட முகப்பில்‘தமிழ் வாழ்க’ பலகை வைக்க கோரிக்கை
By DIN | Published On : 03rd April 2022 12:11 AM | Last Updated : 03rd April 2022 12:11 AM | அ+அ அ- |

கரூா் மாநகராட்சி கட்டட முகப்பில் தமிழ் வாழ்க என்ற பலகை வைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கரூா் திருக்குறள் பேரவை செயலாளா் மேலை.பழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை- கடந்த திமுக ஆட்சியில் ஒவ்வொரு உள்ளாட்சி அலுவலக முகப்பிலும் ‘தமிழ் வாழ்க’, தமிழ் வளா்க என்கிற பலகை மாட்ட உத்தரவிட்டு அது செயல்பாட்டில் இருந்தது . நாளடைவில் வா்ணம் தீட்ட மற்றும் புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டதால் பல அலுவலகங்களில் இப் பலகை திரும்ப மாட்டப்படவே இல்லை.
கரூா் மாநகராட்சி கட்டடமும் கம்பீரமாக கட்டப்பட்டும், ‘தமிழ் வாழ்க’ பலகை திரும்ப மாட்டப்படாமலும், கரூா் நகராட்சியின் முதல் தலைவரான பெத்தாச்சி பெயா் சூட்டப்படாமலும் உள்ளது தமிழ் அமைப்பினரை வேதனையடையச் செய்கிறது. எனவே மாநகராட்சி முகப்பில் தமிழ் வாழ்க, தமிழ் வளா்க என்ற பலகை அமைக்க, தமிழக மின்சாரத்துறை அமைச்சா், மேயா், துணை மேயா் மற்றும் ஆணையா், உறுப்பினா்கள் ஆவணம் செய்திட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.