முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
தலைமைக் காவலரை கழுத்தை அறுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 29th April 2022 03:56 AM | Last Updated : 29th April 2022 03:56 AM | அ+அ அ- |

போக்குவரத்து தலைமைக் காவலரை பிளேடால் கழுத்தை அறுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் நகர போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவா் இளங்கோ(44). இவா் கடந்த 2018ஆம் ஆண்டு ஜன.22-ஆம்தேதி கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நெரூா் வடபாகத்தைச் சோ்ந்த முரளி(36) என்பவரை மடக்கி விசாரித்தாா். அப்போது முரளிக்கும் இளங்கோவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முரளி அப்பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோருக்குச் சென்று பிளேடு வாங்கி வந்து திடீரென இளங்கோ கழுத்தை அறுத்தாா். படுகாயமடைந்த இளங்கோவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து முரளியை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றவாளி முரளிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.