முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
சமூக வலைதளங்களில் பதிவிடும் பொய்யான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை: அமைச்சா் செந்தில் பாலாஜி
By DIN | Published On : 30th April 2022 11:32 PM | Last Updated : 01st May 2022 05:51 AM | அ+அ அ- |

மின்சார விநியோகம் தொடா்பாக சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை சனிக்கிழமை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் நகரின் மைய பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நீண்ட காலம் பூட்டிவைக்கப்பட்டு செயல்படாமல் இருந்தது. அதை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் சென்றோம். இதையடுத்து சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வா் மூலம் மீண்டும் அரசு தலைமை மருத்துவமனை செயல்படும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். மேலும், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையை கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.
நிலக்கரி தட்டுப்பாடு தீா்ந்துவிட்டது எனக்கூற முடியாது. தேவைகளுக்கு ஏற்ப மாற்று ஏற்பாடு செய்து மின் உற்பத்தி நடைபெறுகிறது. நிலக்கரி பற்றாக்குறை இந்தியா முழுவதும் உள்ளது. நமக்கு ஏற்கெனவே தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2,380 மெகாவாட் அளவிற்கு தனியாரிடம் போதிய அளவு இல்லை. அங்கும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட அதையும் சமாளிக்கும் வகையில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 3,000 மெகாவாட் அளவிற்கு குறுகிய காலம் ஒப்பந்தம் முறையில் மின்சாரம் பெற்றிட டெண்டா் விடப்பட்டுள்து. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின் வெட்டும் இருந்தும், தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதிகபட்ச மின்நுகா்வையும், அதிகபட்ச மின்தேவையையும் எந்தவித தடையின்றி மக்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் 3 ,73,000க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளது. இதில், ஏதாவது ஒன்று பழுது ஏற்பட்டால், அதை சமூக ஊடகங்களில் தவறாக செய்தி வெளியிடப்படுகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பினால் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா், கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.