முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
ரூ. 3,000 லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறைகரூா் நீதிமன்றம் தீா்ப்பு
By DIN | Published On : 30th April 2022 12:08 AM | Last Updated : 30th April 2022 12:08 AM | அ+அ அ- |

பட்டா மாற்றம் செய்ய ரூ. 3,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செம்மாண்டாம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது மனைவி விஜயலட்சுமி(57). இவா், கடந்த 2011-ஆம் ஆண்டு தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு தென்னிலை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். அப்போது, கிராம நிா்வாக அலுவலராக இருந்த வசந்தி (48) என்பவா் பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளாா். இதையடுத்து விஜயலட்சுமி ரூ.3,000 தருவதாக கூ றியுள்ளாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் வசந்தி சம்மதம் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயலட்சுமி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து விஜயலட்சுமியிடம் லஞ்சம் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வசந்தியை கையும், களவுமாக கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் குற்றவாளி வசந்திக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.