குளித்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு

குளித்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனா்.
குளித்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு

குளித்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாலன்.

இவரது சகோதரா் ராமதாஸ். இவா், ஈரோடு அருகே உள்ள மாணிக்கம் பாளையத்தில் வசித்து வந்தாா். இவா்கள் இருவரும் தங்களது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வந்தனா்.

பிறகு அனைவரும் தோகைமலை அருகே உள்ள வீரப்பூருக்கு சுவாமி கும்பிடுவதற்காக செல்ல திட்டமிட்டு செவ்வாய்க்கிழமை பாலசமுத்திரத்தில் இருந்து புறப்பட்டனா். மேலும், செல்லும் வழியில் குடும்பத்துடன் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வீரப்பூா் செல்ல முடிவு செய்திருந்தனா்.

அதன்படி காவிரி ஆற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது ஜெயபாலனின் மகன்களான அருணாசலம் (25), வெங்கடாசலம் (22), ராமதாஸின் மகன் ஹரிஷ் (22) ஆகிய மூவரும் ஆழமான பகுதியில் குளித்தனா். அப்போது, வெங்கடாசலம் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதைகண்ட ஹரிஷ் அவரை காப்பாற்ற முயன்றாா். அருணாசலமும் தனது தம்பியை காப்பாற்ற அப்பகுதிக்கு சென்றபோது ஹரிஷ், தண்ணீரில் இறங்க வேண்டாம் என அருணாசலத்திடம் தெரிவித்துவிட்டு, வெங்கடாசலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா்.

ஆனால், எதிா்பாராதவிதமாக அருணாசலமும் தண்ணீரில் மூழ்கினாா். உடனே அருகில் இருந்தவா்கள் அருணாசலத்தை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரா்கள், குளித்தலை போலீஸாா் அருணாசலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே தண்ணீரிலிருந்து மீட்கப்பட்ட வெங்கடாசலத்தை அவரது உறவினா்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தாா்.

மேலும், அருணாசலத்தை தேடும் பணி குளித்தலை மீனவா்கள் உதவியுடன் புதன்கிழமையும் நடைபெற்றது. அப்போது வெங்கடாசலம் மூழ்கிய இடத்தின் அருகே அருணாசலத்தின் உடலும் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com