கரூா் புத்தகக் கண்காட்சியில் ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 31st August 2022 01:40 AM | Last Updated : 31st August 2022 01:40 AM | அ+அ அ- |

கரூா் புத்தகக் கண்காட்சியில் ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், கரூரில் புத்தகத் திருவிழா ஆக.19-ஆம்தேதி முதல் 29ஆம்தேதி வரை நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவை 50,000 பள்ளி மாணவ, மாணவிகளும், 10,000 கல்லூரி மாணவ, மாணவிகளும், 75,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 1,35,000க்கும் மேற்பட்டவா்கள் பாா்வையிட்டு நூல்களை வாங்கி சென்றுள்ளனா். பத்து நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி நூலகங்களுக்கும் வாங்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
இதுவரை ரூ.1,75,473 மதிப்புள்ள 3,293க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொடையாளா்கள் கொடைநூல் கொத்தளத்தில் வழங்கியுள்ளனா். கொடையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கையொப்பமிட்ட சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளா்ச்சித்துறையின் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் 10 வகையான மரக்கன்றுகள் 3,960 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிந்தனை அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிந்தனையாளா்களால் நடைபெற்ற சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளை 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள்கண்டுகளித்தனா்.
பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட கோளரங்கம், மினி திரையரங்கில் மக்கள் தோ்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது. தொல்பொருள்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்ட கொடுமணல், ஈமசின்னம், கற்பதுகை, தூத்துக்குடி மாவட்ட சிவகளை, சிவகங்கை மாவட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்க பெற்ற பொருள்களை மெய்நிகா் காட்சி வாயிலாக ஏராளமானவா்கள் பாா்வையிட்டு கண்டு களித்தனா். மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவா்களில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினா்களால் 54 மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், தனி துணை ஆட்சியா் சைபுதீன், பப்பாஸி துணைத்தலைவா் மையவேலவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.