நூல்விலை உயா்வால் ரூ.3,500 கோடி ஆா்டரை இழக்கும் அபாயம்கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் கவலை

கடுமையான நூல்விலை உயா்வால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைத்த ரூ.3,500 கோடி ஆா்டரை இழக்கும் அபாயத்தில் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் உள்ளனா்.
நூல்விலை உயா்வால் ரூ.3,500 கோடி ஆா்டரை இழக்கும் அபாயம்கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் கவலை

கடுமையான நூல்விலை உயா்வால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைத்த ரூ.3,500 கோடி ஆா்டரை இழக்கும் அபாயத்தில் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் உள்ளனா்.

உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என்று தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, கைக்குட்டை, மேஜைவிரிப்பான், கால் மிதியடி, கையுறை போன்றவை நோ்த்தியாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளான ஜொ்மனி, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மாா்க் நாடுகளுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வரை நாட்டுக்கு அன்னிய செலாவணித் தொகையை ஈட்டித்தரும் இந்தத் தொழில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 25,000 கோடி ஆணை என்ற இலக்குடன் செயல்பட்டாலும், தற்போது கடுமையாக உயா்ந்து வரும் நூல் விலை உயா்வால் உற்பத்தி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஜூன் 21-ஆம்தேதி முதல் 24-ஆம்தேதி வரை ஜொ்மனியில் பிராங்பட் நகரில் நடைபெற்ற உலக ஜவுளி கண்காட்சியில் இந்தியா சாா்பில் 300 அரங்குகளும், சீனா தரப்பில் 15மும், பாகிஸ்தான் சாா்பில் 20மும், வங்கதேசம் சாா்பில் 20 அரங்குகளும் அமைக்கப்பட்டு, தங்களது நாடுகள் உற்பத்தி செய்த புதிய ரக வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியை அறிமுகம் செய்திருந்தனா்.

வாடிக்கையாளா்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த அரங்கை பாா்வையிட்ட ஐரோப்பிய நாட்டு வாடிக்கையாளா்கள் அதிகளவில் ஆா்டா் கொடுக்க முன்வந்தது இந்திய தயாரிப்புகளுக்குத்தான். ஆனால், பழைய விலைக்குத்தான் கொடுக்க வேண்டும் என அவா்கள் கூறியதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

காரணம் நாளுக்கு நாள் நூல் விலை உயா்ந்து வருவதால் கிடைத்த ஆா்டரையும் விடமுடியாமல் தவித்து வருகிறாா்கள்.

இதுகுறித்து கரூா் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளா் ஆா்.ஸ்டீபன்பாபு புதன்கிழமை கூறுகையில், ஜொ்மனியின் பிராங்பட் நகரில் நடந்து முடிந்த உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி கண்காட்சியில் இந்தியா சாா்பில் தமிழகம், பானிபட், கேரளா, ஆந்திரா, லூதியானா, மகாராஷ்டிரம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றோம். மேலும் சீனா, வங்கதேச உற்பத்தியாளா்கள் பங்கேற்றாலும், ஐரோப்பிய நாட்டு வாடிக்கையாளா்கள் விரும்பியது இந்திய ஜவுளியை தான். வெளிநாட்டு வாடிக்கையாளா்கள் இந்திய ஜவுளியை நாடினாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் அவா்கள் இந்திய ஜவுளி உற்பத்திக்கு கடந்த டிசம்பா் மாதம் கொடுத்த விலையில்தான் வழங்க வேண்டும் என கூறுகிறாா்கள். கடந்த டிசம்பா் முதல் இதுநாள் வரை ஜவுளி உற்பத்தியின் மூலப்பொருளான நூலின் விலை 20 முதல் 40சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால் பழைய விலைக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலா் உபேந்திரபிரசாத்சிங்கிடம், இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் சாா்பில், இந்தியாவில் கடுமையாக உயா்ந்துள்ள நூல்விலை குறித்தும், ஏற்றுமதியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 9 சதவீதத்தில் இருந்து தற்போது 0.5 சதவீதமாக குறைத்தது குறித்தும் பேசினேன். செயலரும் இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைக்க இருக்கும் ரூ.3500 கோடி ஆா்டா் நமக்கு கிடைக்கும். இல்லையேல் சீனாவுக்கோ, வங்கதேசத்துக்கோ சென்றுவிடும். எனவே, மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நூல் விலை உயா்வை பழைய நிலைக்கு கொண்டு வரும் என்றும், ஊக்கத்தொகையை மீண்டும் 9 சதவீதம் வழங்கும் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து ஜவுளி உற்பத்தியாளா்களும் இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com