சீரான மின் விநியோகத்துக்காக 24 ஆயிரம் மின் மாற்றிகள் அமைப்பு அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
By DIN | Published On : 02nd May 2022 12:24 AM | Last Updated : 02nd May 2022 12:24 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்துக்காக ஓராண்டுக்குள் 24,000 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் ஒன்றியம், மண்மங்கலம் ஊராட்சி, கிழக்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பாா்வையாளராகப் பங்கேற்று, மேலும்அவா் பேசியது:
கரூா் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரியைத் திறந்து வைத்ததற்கும், பயன்பாடு இல்லாமல் இருந்த பழைய அரசுத் தலைமை மருத்துவமனையை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீண்டும் செயல்பட வைத்தமைக்காகவும் தமிழக முதல்வருக்கு மாவட்ட மக்களின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.13 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதற்காக ஆண்டுக்கு ரூ.181 கோடி மானியத் தொகையை அரசே ஏற்று, மின் கட்டணத்தை செலுத்துகிறது. தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்குவதற்காக ஓராண்டில் 24,000 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூா் மாவட்டத்தில் ரூ.700 கோடியில் புதிய கதவணை, 19 தடுப்பணைகள் கட்ட ரூ.2000 கோடி நிதியை தமிழக முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். தேவைப்படும் இடங்களில் புதிய பாலங்கள், சுற்று வட்டச் சாலைகள் போன்ற அனைத்துத் திட்டப்பணிகளும் விரைவில் வரவுள்ளன. குளித்தலை அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், தமிழ்நாடு வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.