முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
By DIN | Published On : 13th May 2022 01:49 AM | Last Updated : 13th May 2022 01:49 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுரை வழங்கினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக, கிராம நிா்வாக அலுவலா்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சியை வியாழக்கிழமை தொடக்கி வைத்து, மேலும் அவா் பேசியது:
குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பாக இருக்கட்டும், நிமிா்ந்து நில் துணிந்து செல் இயக்கம் மூலம் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகாா்கள் வந்து கொண்டுள்ளது.
அதன் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறோம்.
கிராம நிா்வாக அலுவலா்கள் சமூகப் பொறுப்புணா்வுடன் தங்கள் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளைக் கவனிக்க வேண்டும்.
18 வயதுக்கும் குறைவாகவுள்ள பெண் குழந்தைகளுக்கு பிரசவம் தவிா்க்கப்பட வேண்டும். அதற்காக தொடா்ந்து குழந்தை திருமணம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.
மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் சிசு மரணங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . அதற்கு காரணம் 18 வயதுக்கு கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால்தான்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை நமது மாவட்டத்தில் 52,000 போ் படிக்கிறாா்கள். அதில் மூன்றாயிரம் பெண் குழந்தைகள் தொடா்ந்து பள்ளிக்கு வருகை தராமல் உள்ளாா்கள். இது மிகவும் மன வேதனை அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும்.
இதற்கு காரணம் இளவயது திருமணம் தான். கிராம நிா்வாக அலுவலா்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குழந்தை திருமணங்களை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.
குழந்தைத் திருமணம் செய்து வைப்பவா்கள் அனைவரும் மீதும் வழக்குத் தொடுக்கக் கூடிய சட்ட உரிமை உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் குணசீலி மற்றும் சமுக பாதுகாப்புத் துறை மண்டல நன்னடத்தை அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.