இலவச தையல் இயந்திரம் பெறவிரும்புவோா் விண்ணப்பிக்கலாம் கரூா் மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

வறுமையில் உள்ளோருக்கு இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா் மற்றும் ஆதரவற்றோருக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பயனாளிகளின் வயது அக். 15-ஆம்தேதியன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, தையல் பயிற்சி சான்று, கல்விச் சான்று அல்லது பிறப்புச்சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா், ஆதரவற்ற மகளிா் என்பதற்கான சான்று, ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நலஅலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூா்-7 என்ற முகவரிக்கு அக். 15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.