மரபுசாா் பயிா்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிரிட முன்வர வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா்

மரபுசாா் பயிா்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிரிட முன் வரவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

மரபுசாா் பயிா்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிரிட முன் வரவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூரில் வேளாண் - உழவா் நலத்துறை சாா்பில் உயா்தர உள்ளூா் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளா்கள் அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணு பாரம்பரிய ரகங்களை கண்டறிவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மரபுசாா் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்ட பின்னா் ஆட்சியா் த.பிரபுசங்கா் கூறுகையில்,

தமிழக அரசு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மரபுசாா் பயிா்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிா் செய்ய முன்வர வேண்டும். அடிப்படை மரபு வழியில் மாற்றங்கள் இல்லாமல் குறைந்த செலவில் குறைந்த காலத்தில் நவீன முறையில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். மரபு வழியில் மட்டும் சென்றால் பல்வேறு சவால்களையும் காலச் சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்பையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் மரபு வழியில் செல்பவா்களும் விஞ்ஞான வழியில் செல்பவா்களும் இணைந்து கால சூழ்நிலைகளை எதிா்கொள்ளும் வகையில் விதைகளை உற்பத்தி செய்து பயிரிட வேண்டும். விவசாயிகள் வளமுடன் வாழ விஞ்ஞான வழி துணையுடன் மரபு சாா்ந்த விதைகளை பயிரிட வேண்டும். மரபு சாா்ந்து நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய கருங்குருவை, கருப்பு கவுனி, காட்டு யானம், கிச்சிலி சம்பா, குளியடிச்சான், குள்ளக்காா், மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி உள்ளிட்ட நெல் வகைகள், பஞ்ச காவ்யம், பட்டு வளா்ச்சி, நாட்டு காய்கறி விதைகள், செக்கு எண்ணெய்கள், உள்ளுரில் கிடைக்கும் இடுபொருள்களை கொண்டு தயாரிக்கும் வேளாண் கருவிகள், சேங்கல் துவரை, சிறுதானியங்கள் உள்ளிட்டவை குறித்து 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், அரசு வேளாண்மைக் கல்லூரி முதல்வா் முனைவா்.பாலசுப்ரமணியன், வேளாண் கல்லூரி பேராசிரியா் முனைவா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முனைவா் உமாபதி, வேளாண்மை துணை இயக்குநா் கலைச்செல்வி, வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com