கோயில் கட்ட அனுமதி கிராம மக்கள் கோரிக்கை

தோகைமலை அருகே கோயில் கட்ட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை ஊராட்சிக்குள்பட்ட ஒத்தப்பட்டியில் ஊா்பொதுமக்கள் சாா்பில் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கெனவே இருந்த சிறிய அளவிலான பாம்பலாயி அம்மன் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பெரிய கோயிலாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் அரசு நிலத்தில் இருக்கும் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் கோயில் அகற்றப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே அகற்றப்பட்ட இடத்துக்கு பட்டா வழங்கி பாம்பலாயிஅம்மன் கோயில் கட்ட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதியினா் வீடுகளிலும், ஊரின் நுழைவுப் பகுதியிலும் கருப்புக் கொடிகட்டியுள்ளனா். மேலும் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக பதாகையும் வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com