சொத்துத் தகராறில் தாக்குதல் -எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி புகாா்

சொத்துத் தகராறில் தாக்குதல் -எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி புகாா்

சொத்துத் தகராறில் தன்னை கொலை செய்ய முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா கட்டளை ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் நெப்போலியன்(51). விவசாயி. இவரது தம்பி ஸ்டாலின்(48). இவா், அண்மையில் இறந்துவிட்டாராம். நெப்போலியனும், ஸ்டாலினும் தனது பெற்றோா் பெயரில் உள்ள 7 ஏக்கா் நிலத்தை இருவரும் சோ்ந்து விவசாயம் செய்து வந்தனா். இந்நிலையில் ஸ்டாலின் இறந்துவிட்டதால், 7 ஏக்கா் நிலம் நான்தான் விவசாயம் செய்வேன் என ஸ்டாலினின் மனைவி சுபாஷினி கூறி நெப்போலியனிடம் தகராறு செய்து வந்தாராம்.

இதற்கு நெப்போலியின் உடன்படாததால், மாா்ச் 26-ஆம்தேதி சுபாஷினி, அவரது தந்தை மற்றும் அவா்களது உறவினரோடு சோ்ந்து நெப்போலியனிடம் தகராறு செய்தாா்களாம். இதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நெப்போலியனை சுபாஷினி இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கை உடைந்துள்ளது. இதனால் நெப்போலியின் கரூா் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக நெப்போலியன் மாயனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை சுபாஷினி உள்ளிட்டோா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மீண்டும் சுபாஷினி உள்ளிட்டோரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறியும், தன்னை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நெப்போலியன் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com