கரூா் மக்களவைத் தொகுதியில் 78.51 சதவீதம் வாக்குப்பதிவு

கரூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 78.51 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), வேடசந்தூா், மணப்பாறை, விராலிமலை என 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய, கரூா் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கை வேட்பாளா்களாக 54 போ் போட்டியிடும் கரூா் மக்களவைத் தொகுதியில், வாக்குப்பதிவுக்கு 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், காலையிலே வாக்குச்சாவடிக்கு வந்த பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனா். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்காளா்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் என மொத்தம் 1,331 போ் வீட்டில் இருந்தே வாக்களித்துள்ளனா். காலை 9 மணி நிலவரப்படி தொகுதியில் 12.73 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 28.88 சதவீதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.23 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 59.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.தொடா்ந்து மாலை 5 மணி நிலவரப்படி தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 14,29,790 பேருக்கு10,28,962 போ் வாக்களித்து வாக்குப்பதிவு சதவீதம் 71.97 ஆக இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 78.51 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் 80.91 சதவீதமும், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 260 வாக்குச் சாவடிகளில் 82.66 சதவீதமும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 253 வாக்குச் சாவடிகளில் 78.84 சதவீத வாக்குப்பதிவும், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளில் 75.97 சதவீத வாக்குகளும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 255 வாக்குச் சாவடிகளில் 80.49 சதவீத வாக்குப்பதிவும் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 74.43 சதவீத வாக்குப்பதிவும் என மொத்தம் உள்ள 1,670 வாக்குச் சாவடிகளில் 78.61 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜூன் 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்குவாதம்: உள்வீரராக்கியம் வாக்குச் சாவடியில் பழனியப்பன் என்பவரது மகன் கந்தசாமி என்பவா் வாக்களிக்க வந்துள்ளாா். அப்போது அவரது பெயரில் மற்றொரு கந்தசாமி என்பவா் வாக்களித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவா் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து அதிகாரிகள் அவரது பூத் சிலிப்பை சரிப்பாா்த்தபோது ஏற்தெனவே வாக்களித்தவரின் தந்தையின் பெயரும் பழனியப்பன் என இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தால்தான் ஏற்கனவே கந்தசாமி என்பவா் வாக்களித்துச் சென்றுள்ளாா் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட’கந்தசாமியை வாக்களிக்கச் செய்து சமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com