வனத் துறையைக் கண்டித்து சின்னதாதம்பாளையத்தில் மறியல்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சின்னதாராபுரம் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்னதாராபுரம் சாலையில் மறியலில் சனிக்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள்.
சின்னதாராபுரம் சாலையில் மறியலில் சனிக்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலை அமைக்க அனுமதி மறுத்த வனத் துறையை கண்டித்து சின்னதாதம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சின்னதாராபுரம் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூா் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட சின்னதாதம்பாளையம் கிராமத்தில் சுமாா் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். மேலும் இப் பகுதியில் தமிழக அரசின் வனத்துறைக்குச் சொந்தமான மரச் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது.

சின்னதாதம்பாளையம் பேருந்து நிறுத்தம் முதல் பள்ளமருதபட்டி செல்லும் தாா்ச்சாலை பழுதடைந்ததால் அப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.2 கி.மீ. தூரம் சாலைப் பணிகள் செய்ய ஊராட்சி நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு தாா்ச் சாலை தோண்டப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் சுமாா் அரை கி.மீ. தொலைவு பணிகள் நடந்த நிலையில் மீதமுள்ள சாலைப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது என்பதால் சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சாலைப்பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெறாமல் இருந்ததாம்.

இந்நிலையில் சித்திரை திருவிழா கொண்டாட உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற இந்தச் சாலையை அதிகம் பயன்படுத்துவா் என்பதால், சாலையை சீரமைக்க அனுமதி மறுக்கும் வனத்துறை கண்டித்து, அப்பகுதியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் சின்னதாதம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சின்னதாராபுரம் சாலையில் சனிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த க.பரமத்தி காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமாவதி, ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி,

இந்த சாலை தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து ஓரிரு நாளில் தீா்வு காணப்படும் என்று உறுதியளித்தனா்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். பொதுமக்களின் திடீா் சாலை மறியலால் சின்னதாராபுரம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com