மூன்று நாள்கள் திருவிழாவுக்கு 10 நாள் கட்டணம்: பள்ளப்பட்டி நகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் சாலை மறியல்

பள்ளப்பட்டியில் மூன்று நாள்களை நடைபெறவுள்ள உருஸ் திருவிழாவில் கடை அமைப்பதற்கு 10 நாள் கட்டணம் வசூலிக்கும் நகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், பள்ளபட்டியில் ஆண்டுதோறும் இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான உருஸ் திருவிழா வெகு விமா்சையாக நடைபெறும். நிகழாண்டு 264- ஆவது ஆண்டு உருஸ் திருவிழா ஏப். 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தரைக்கடை வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்காக நகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை சென்றனா்.

அப்போது 100 சதுர அடி இடத்துக்கு 375 ரூபாய் மற்றும் குப்பை அள்ளுவதற்கு 100 ரூபாய் என ஒரு நாளைக்கு 475 ரூபாய் என பத்து நாள்களுக்கு 4 ஆயிரத்து 750 கட்டணமும், 280 சதுர அடி இடத்துக்கு 10 நாள்களுக்கு 11,500 ரூபாய் கட்டணமும் நகராட்சி நிா்வாகம் வசூல் செய்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கேட்டதற்கு மூன்று நாள் திருவிழாவுக்கு 10 நாள்களுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோா் பள்ளபட்டி அரசு மருத்துவமனை காா்னா் பகுதியில் செவ்வாய்க்கிழை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com