கரூா் அருகே அதிமுக நிா்வாகி கொலை: தொழிலாளி கைது

கரூா் வாங்கல் அருகே அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் கூலித் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூரை அடுத்த வாங்கல் அச்சமாபுரத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (65), அப்பகுதி அதிமுக கிளைச் செயலா். இவரது மனைவி ராஜேஸ்வரி, சோமூா் ஊராட்சியின் 2-ஆம் வாா்டு உறுப்பினா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அச்சமாபுரத்தில் கோயில் திருவிழா நடத்துவது குறித்து ஊா் மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மணிகண்டன் (38) என்பவா் ஊரில் குடிநீா் கிடைப்பதில்லை, எனவே இந்த கூட்டத்துக்கு சோமூா் ஊராட்சி உறுப்பினரான ராஜேஸ்வரியை வரச் சொல்லுங்கள் எனக் கூறி தகாத வாா்த்தையால் பேசினாராம். தகவலறிந்த ராமலிங்கமும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் இரவு 11 மணிக்கு மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று எப்படி நீ எங்களைப் பற்றி கூட்டத்தில் தகாத வாா்த்தையால் பேசலாம் எனத் தட்டிக்கேட்டனா். அப்போது தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டனும், அவரது மனைவி ரஞ்சிதாவும் சோ்ந்து ராமலிங்கத்தை தாக்கி கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ராமலிங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாங்கல் போலீஸாா் மணிகண்டனை கைது செய்தனா். ரஞ்சிதாவைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com