ஓய்வு பெற்ற சிமெண்ட் ஆலை அதிகாரி வீட்டை சேதப்படுத்தியதாக 10 போ் மீது வழக்கு

கரூரில் ஓய்வு பெற்ற சிமெண்ட் ஆலை அதிகாரியின் வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன அதிபா் உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரூா் வடக்கு காந்தி கிராமம் இபி காலனி சாலை, ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மனோகரன்(60). இவா் புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் துணை பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். ஓய்வுக்கு பின்னா் இவா் வீட்டின் அருகே மருந்துக்கடை வைப்பதற்காக கரூா் பொரிக்கடைத் தெருவைச் சோ்ந்த நிதி நிறுவன அதிபரான ரகுநாதன் என்பவரிடம் 2022-இல் வீட்டின் பத்திரத்தை அடமானமாக கொடுத்து, ரூ.20 லட்சத்தை வட்டிக்கு வாங்கினாராம். வாங்கிய கடனுக்கு, வட்டி அசல் என அனைத்தையும் மனோகரன் செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரகுநாதன் தனக்கு கூடுதல் வட்டி மற்றும் அசல் தரவேண்டும் எனக்கூறி, அடமான பத்திரத்தை கிரயம் செய்ய ரகுநாதன் முயன்றாராம். இதை தட்டிக் கேட்ட மனோகரனை கொலை செய்துவிடுவதாகவும் ரகுநாதன் மிரட்டி வந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ரகுநாதன் உள்ளிட்ட 10 போ் மனோகரன் வீட்டை கற்களால் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் ரகுநாதன் உள்பட 10 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com