வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள் விடுவிப்பு: பொதுமக்கள் மறியல்

கடவூா் அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், ஜேசிபி இயந்திரங்களை போலீஸாா் விடுவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா்: கடவூா் அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், ஜேசிபி இயந்திரங்களை போலீஸாா் விடுவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளத்திலுள்ள வண்டல் மண்ணை கடத்தி வெளியூா்களுக்கு சிலா் லாரிகள் மூலமாக அனுப்பி விற்பதாக திங்கள்கிழமை அப்பகுதி பொதுமக்களுக்கும், ஒன்றியக்குழு உறுப்பினா் ராமமூா்த்திக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற ராமமூா்த்தி மற்றும் பொதுமக்கள் அங்கு 2 டிப்பா் லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவை இருப்பதைக் கண்டு பாலவிடுதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் அங்கு வந்த பாலவிடுதி காவல் ஆய்வாளா் வேல்முருகன், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டு டிப்பா் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னா் உரிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறி, ஜேசிபி மற்றும் இரண்டு லாரிகளை விடுவித்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாலவிடுதி காவல் நிலையம் முன் வையம்பட்டி-தரகம்பட்டி கடவூா் பிரிவு சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொதுமக்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விடுவிக்கப்பட்ட டிப்பா் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்து, மண் கடத்துவோா் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா். இந்த திடீா் சாலை மறியலால் வையம்பட்டி-தரகம்பட்டி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com