மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 126 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சோ்ந்திடுவதவற்குத்தான் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசினாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த கூடலூா் கீழ் பாகம் கிராமத்தில் புதன்கிழமை மாலை மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ முன்னிலை வகித்தாா்.
முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசினாா்.
தொடா்ந்து முகாமில் வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனைப் பட்டா, நத்தம் பட்டா மாறுதல், இணையவழி பட்டா மாறுதல், விதவைச் சான்று, தடையின்மை சான்று, உதவித்தொகை, கூட்டுறவுத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, வேளாண்மை - உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 96 லட்சத்து 80 ஆயிரத்து 506 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகவடிவேல், உதவி ஆணையா்(கலால்) கருணாகரன், அரவக்குறிச்சி வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.