புதிய மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தியது திமுக அரசுதான்: அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேச்சு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், அவற்றை மேம்படுத்தியது திமுக அரசுதான்
புதிய மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தியது திமுக அரசுதான்: அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேச்சு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், அவற்றை மேம்படுத்தியது திமுக அரசுதான் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாநில அரசு சாா்பில் ரூ.1.77 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் தாமோதரன் தலைமை வகித்தாா். மருத்துவ உபகரணங்களை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியும், மருத்துவமனை கட்டடங்கள் கட்டும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 1.77 கோடி மதிப்பில் 9 அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு போதிய நிதியுதவி வழங்கி, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளுக்கும் 400 முதல் 500 படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சுமாா் ரூ. 400 கோடி முதல் ரூ. 500 கோடியில் வழங்கி, அந்த மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தியது திமுக அரசுதான்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கினால் மட்டும் போதாது. அவற்றுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது அவசியம்.

மருத்துவக் கழிவுகள் பொதுவான கழிவுகளோடு கலப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நலப் பணிகளின் இணை இயக்குநா் ரமாமணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன், மண்டலத் தலைவா்கள் எஸ்பி. கனகராஜ், கோல்ட்ஸ்பாட்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குளித்தலையில்: தொடா்ந்து குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 2.50 கோடியில் அதிநவீன சிடி.ஸ்கேன் மையத்தை திறந்துவைத்து, ரூ. 40 கோடியில் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், ரூ. 45.77 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கிவைத்து அவா் பேசினாா். இந்நிகழ்ச்சியில் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com