குளித்தலை-மணப்பாறை சாலையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பாறைப்பட்டி காலனி பொதுமக்கள்.
குளித்தலை-மணப்பாறை சாலையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பாறைப்பட்டி காலனி பொதுமக்கள்.

காவிரி குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தோகைமலை அருகே காவிரி குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தோகைமலை அருகே காவிரி குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட பாறைப்பட்டி காலனியில் சுமாா் 60 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு பொருந்தலூா் ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் மணப்பாறை காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகளுக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதாலும், சில நேரங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாக வெளியேறியதால், கடந்த இரு வாரங்களாக பாறைப்பட்டி காலனிக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாய்களை சீரமைக்கும் பணியும், குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றன. இதனால் குடிநீரின்றி பாதிக்கப்பட்ட பாறைப்பட்டி காலனி மக்களுக்கு பொருந்தலூா் ஊராட்சி மன்றம் சாா்பில் லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த குடிநீரும் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து தங்கள் பகுதிக்கு உடனே குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை குளித்தலை- மணப்பாறை சாலையில் சின்ன ரெட்டியபட்டி மேட்டுக்கடை பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த பொருந்தலூா் ஊராட்சி மன்றத் தலைவா் சத்யா ராமச்சந்திரன், பொருந்தலூா் ஒன்றியக் குழு உறுப்பினா் புவனேஸ்வரன், ஊராட்சி செயலாளா் இளங்கோவன் மற்றும் தோகைமலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து, முறையாக குடிநீா் வழங்குவோம் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com