கரூரில் நூதன முறையில் மாற்றுத்திறனாளி மனு அளிப்பு

கரூா் ஆட்சியரகத்துக்கு கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமை மாலையாக அணிந்து வந்து மாற்றுத்திறனாளி மனு அளித்தாா்.

கரூா்: கரூா் ஆட்சியரகத்துக்கு கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமை மாலையாக அணிந்து வந்து மாற்றுத்திறனாளி மனு அளித்தாா்.

கரூா் வெங்கமேடு அண்ணாசாலை பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தா. பாபு (40). இவா், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மூன்று சக்கர வாகனத்தில் கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், எனக்கு இரு கால்களும் 75 சதவீதம் ஊனம் என்பதால் எந்த வேலையும் செய்ய இயலாது. இதனால், எனது மனைவிதான் கூலி வேலைக்குச் சென்று இரு குழந்தைகளையும், என்னையும் காப்பாற்றி வருகிறாா்.

கரூா் ஏமூரில் எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொள்ளலாம் என பிப்ரவரி 26-ஆம்தேதி தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. இதுதொடா்பாக தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டால் அந்தப் பதிவேட்டில் உனது பெயா் இல்லை என்கிறாா். இதனால் மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். அவரும் ஏற்பாடு செய்துதருவதாக கூறியுள்ளாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com