மணல் கடத்துவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை: கரூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

மணல் கடத்துவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை: கரூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் மணல் கடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குள்பட்ட பஞ்சமாதேவி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் ரூ. 72.93 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்ப்பணிகளையும் மற்றும் செவ்வந்திபாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் படுகையில் அனுமதியின்றி மனல் அள்ளப்பட்டுள்ளதையும் ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆய்வு பதிவேடுகள், நில அளவை பிரிவு பதிவறை, வட்ட வழங்கல் அலுவலகப்பிரிவு பதிவறையையும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியில் நூலக கட்டடம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்துள்ளோம். மேலும் செவ்வந்திபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் இரவில் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் களஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அலுவலா்கள் மற்றும் காவல்துறையினா் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் 10 காவல் சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டு 24 அணி நேரமும் அலுவலா்கள் தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் செவ்வந்திபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நள்ளிரவில் இரு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அள்ளி வருவதாக வந்தப் புகாரைத் தொடா்ந்து, செவ்வந்திபாளையம் பகுதி காவிரி ஆற்றுப் பகுதியில் அலுவலா்களை தணிக்கையில் செய்யப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மணல் கடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com