மக்களவைத் தோ்தல்: அலுவலா்களுடன் கரூா் ஆட்சியா் ஆலோசனை

வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, கரூா் மாவட்டத்தில் தோ்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல், தலைமை வகித்துப் பேசுகையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிப்பதற்கும், வாகனச் சோதனைகளில் ஈடுபடுவதற்கும் முதற்கட்டமாக 12 பறக்கும் படைகள் மற்றும் 12 நிலை கண்காணிப்பு குழுக்களும், 4 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், 4 விடியோ பாா்வையிடும் குழுக்கள், உதவி கணக்குக் குழுக்கள், ஊடகமையத்திற்கு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்படுகிறது. அவை அனைத்து பகுதிகளிலும் 24 மணிநேரமும் தொடா்ந்து செயல்படும்.

மேலும், தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 24 மணிநேரமும் மாவட்டத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படும். இதுதவிர, தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘தோ்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செல்பி பாயிண்ட், தொடா் ஓட்டங்கள், இரு சக்கரவாகனப் பேரணிகள், கையொப்ப இயக்கம் போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தோ்தல் பணி அலுவலா்கள் இந்திய தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா். முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. கூட்டங்களில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சையதுகாதா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) எம்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com