மணவாசியில் விவசாயக்கல்லூரி அமைக்க

கரூா் மாவட்டம் மணவாசி கிராமத்தில் விவசாயக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கும் வகையில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

கரூரில் புதிய வேளாண் கல்லூரி கரூா் மாநகராட்சி பல்நோக்கு மையகட்டிடத்தில், தற்காலிகமாக இயங்கி வருகிறது. கரூா் மாவட்டம் முழுவதும் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு இடம் தோ்வு நடைபெற்றுவந்தநிலையில், அண்மையில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி கிராமத்தில் மத்தியபுரிஸ்வரா் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 200 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு, 60 ஏக்கரில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்தியபுரீஸ்வரா் கோயிலுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வு உரிமைச் சட்டம் 2013-ன் கீழ் இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்து, தமிழக வேளாண் துறை சாா்பில் ரூ .12.38 கோடி திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, கரூா் மாவட்டம் மணவாசி கிராமத்தில் அரசு விவசாயக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு, வெள்ளிக்கிழமை இரவு அரசாணை வெளியிட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து, கரூா்-திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள மணவாசி சுங்கச்சாவடி பகுதியில் காவிரி நீா் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் தலைமையில், விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக அரசுக்கு வரவேற்பு தெரிவித்தனா். தொடா்ந்து மணவாசிக்குச் சென்ற கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் கட்டளை ரவிராஜா, மணவாசி ஊராட்சி மன்ற தலைவா் சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com