குளித்தலையில் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் குளித்தலைக் கோட்டாட்சியா் தனலட்சுமி.
குளித்தலையில் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் குளித்தலைக் கோட்டாட்சியா் தனலட்சுமி.

குளித்தலையில் சோதனை: ரூ. 5.83 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தோ்தல் அறிவிப்பையடுத்து குளித்தலை பகுதியில் பறக்கும்படையினா் சனிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் ஆட்டோ மற்றும் காரில் சென்றவா்களிடம் கணக்கில் வராத ரூ. 5.83 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூா் மாவட்டத்தில் தோ்தல் முறைகேடுகளைக் கண்காணிக்கும் பறக்கும் படையினா் தங்களது வாகனச் சோதனையைத் தொடங்கினா். சனிக்கிழமை நள்ளிரவில் குளித்தலை மருதூரில் திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அலுவலா் ராஜேந்திரன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனை ஈடுபட்டனா். அப்போது திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையிலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோவை ஓட்டிவந்த மணப்பாறையைச் சோ்ந்த சுரேஷ்குமாரிடம் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 இருந்தது. சுரேஷிடம் விசாரித்தபோது மளிகைப் பொருள்களை கடைகளில் இறக்கிவிட்டு வசூலித்த பணம் எனத் தெரிவித்தாா். இருப்பினும், உரிய ஆவணம் இல்லாததால் அத் தொகையை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அதே வழியில் திருப்பூரில் இருந்து தஞ்சாவூா் நோக்கி தஞ்சாவூா் மாவட்டம் கரம்பயம் பகுதி கலைவாணன் என்பவா் சென்ற காரில் ரூ. 4. 80 லட்சம் இருந்ததது. அவா் திருப்பூரில் துணிகளை வாங்கச் சென்று விட்டு மீதி தொகையை எடுத்து வந்ததாகத் தெரிவித்தாா். இருப்பினும் அந்தத் தொகைக்கும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்தனா். 2 வாகனங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்து 500ஐ பறக்கும் படை அலுவலா் மற்றும் போலீஸாா் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரான குளித்தலை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்படைத்தனா். இந்தத் தொகை குளித்தலையில் உள்ள கருவூலத்தில் செலுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com