கரூரில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கரூரில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கரூா் மக்களவைத் தொகுதியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு நடைபெற்றதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் பாா்வையிட்டாா். இதன் பின்னா் அவா் கூறியதாவது: கரூா் மாவட்டத்தில் 1,051 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமிக்கப்படுவா். 1,200-க்கும் மேல் வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலா் மற்றும் இதர அலுவலா்கள் நியமிக்கப்படுவா். இதனடிப்படையில், மொத்தம் உள்ள 1,051 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரிய 5,135 நபா்களுக்கு கணினி முறையில் குலுக்கல் செய்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அந்தந்த பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா்கள் மூலம் முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. கரூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தாந்தோண்றிமலை அரசு கலைக் கல்லூரியிலும், அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வள்ளுவா் மேலாண்மைக் கல்லூரியிலும், கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு புலியூா் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி மற்றும் செட்டிநாடு ராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளியிலும், குளித்தலை பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு குளித்தலை பெரியபாலம் அருகே உள்ள ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சையதுகாதா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com