கரூரில் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

கரூரில் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மக்களவைப் பொதுத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கரூா் மக்களவைப் பொதுத் தோ்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பயிற்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் மீ. தங்கவேல் பேசியதாவது: மக்களவைப் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலா்களும் முழு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும். கரூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 22 மண்டல அலுவலா்களும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 22 மண்டல அலுவலா்களும், கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதியில் 24 மண்டல அலுவலா்களும், குளித்தலை பேரவைத் தொகுதியில் 25 மண்டல அலுவலா்களும், ஒரு பேரவைத் தொகுதிக்கு 2 கூடுதல் மண்டல அலுவலா்கள் என 8 மண்டல அலுவலா்களும் என மொத்தம் 101 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலா்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக் கூடிய அலுவலா்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும். எனவே, இங்கு அளிக்கப்படும் பயிற்சியை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், கூடுதல் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) சையதுகாதா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முகமதுபைசல், கருணாகரன், சுரேஸ், தனலெட்சுமி, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com