தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 
அடையாளம் காட்டுபவா்தான் பிரதமா்: கரூரில் அமைச்சா் சக்கரபாணி பேட்டி

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் பிரதமா்: கரூரில் அமைச்சா் சக்கரபாணி பேட்டி

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் பிரதமராக போகிறாா் என்றாா் உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி.

கரூா் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் செ.ஜோதிமணி மீண்டும் போட்டியிடுவதையடுத்து தோ்தல் பணிமனை திறப்பு விழா பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவில் உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி, பள்ளிகல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினா் எம்.அப்துல்லா ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா் அமைச்சா் சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 2019-இல் மக்களவை உறுப்பினராக இருந்து, தொகுதிக்குள்பட்ட மக்களை சந்தித்து, அவா்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்துகொடுத்துள்ளாா் வேட்பாளா் ஜோதிமணி.

மீண்டும் அவருக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 34 மாதங்களில் செய்துள்ள சாதனைகளை கூறி வாக்கு கேட்போம். கடந்த தோ்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதுபோல இந்தத் தோ்தலிலும் இந்தியா கூட்டணி தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பல்வேறு பிரதமா்களை உருவாக்கினாா். அதேபோல இம்முறை முதல்வா் ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் பிரதமராக போகிறாா் என்றாா் அவா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் வேட்பாளா் செ.ஜோதிமணி வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி, கரூா் நகரத்தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, திமுக மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், தாரணிசரவணன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ராஜா, ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com