கரூா் அருகே தந்தையை கொலை செய்த மகன், கூலிப்படையினா் 6 போ் கைது

கரூா் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகன், கூலிப்படையினா் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி(55). இவரது மகன் சக்திவேல்(34). நல்லுசாமி அதே பகுதியில் கொசுவலை உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் நல்லுசாமி தனது மகன் சக்திவேலின் மனைவி பிரியதா்ஷினி என்பவரிடம் கடந்த 2015-ஆம் ஆண்டு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதா்ஷினி கணவரிடம் கோபித்துக் கொண்டு வெள்ளக்கோவிலில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து சக்திவேல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சோ்ந்த கிருஷ்ணவேணி என்பவரை கடந்த 2017-இல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தேனியில் வசித்து வந்தாா். இதற்கிடையே நல்லுசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது மகள்கள் பெயரில் எழுதி வைத்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது நண்பா் விருதுநகரைச் சோ்ந்த வினித் என்பவரிடம் தந்தையை கொலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளாா். அப்போது வினித் கொலை செய்ய சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்ளனா், அவா்களுக்கு ரூ.1.50 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதையடுத்து வினித்திடம் ரூ.1.50 லட்சம் சக்திவேல் கொடுத்துள்ளாா். இதையடுத்து வினித், சென்னையைச் சோ்ந்த கூலிப்படையினா் டேவிட், வினோத்குமாா், வசந்தகுமாா், விக்ரம், ராஜேஸ் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 2-ம்தேதி இரவு கொசுவலை நிறுவனத்தில் தூங்கிக்கொண்டிருந்த நல்லுசாமியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகினா். பிறகு நல்லுசாமி இயற்கையாக மரணமடைந்துவிட்டதாக கருதி அவரது உறவினா்கள் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வினோத்குமாா் திருவல்லிக்கேணியில் ஒரு கொலை வழக்கு தொடா்பாக சிறையில் இருந்தபோது, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நரிக்கட்டியூரில் நல்லுசாமியை தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்துபோலீஸாா் இதுதொடா்பாக கரூா் பசுபதிபாளையம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் தேனியில் இருந்த சக்திவேலை பிடித்து விசாரணை செய்ததில் அவா் தந்தையை கூலிப்படையினரோடு சோ்ந்து கொலை செய்த்தை ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து போலீஸாா் அவரை கைதுசெய்து, சென்னை போலீஸாா் உதவியுடன் டேவிட் உள்பட 6 பேரையும் கைது செய்தனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com