‘பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை’

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் வெடிமருந்து உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பட்டாசு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகள் நல்ல நிலையிலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி அந்த இடத்திற்குச் செல்லும் வகையிலும் இருக்க வேண்டும். தொழிலாளா்கள் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். வேலை செய்யும்போது அவா்களுக்கு சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். வெடி பொருள்கள் தயாரிக்கும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும்.

வாா்ப்பு இரும்பு எடையுடன் கூடிய வழக்கமான இரும்பு எடை இயந்திரங்கள், ரசாயன சேமிப்பு அறை மற்றும் கலவை அறையில் இரும்புச் சல்லடைகள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு ரசாயனங்களுக்கு வெவ்வேறு சல்லடை பயன்படுத்த வேண்டும். தரையை ரப்பா் காா்பெட் மற்றும் பாய்களால் மூட வேண்டும். ரப்பா் பாய்கள், தரைவிரிப்புகளை வழங்காமல் எந்த யூனிட்டும் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

பட்டாசு ஆலை நிா்வாகம் தொழிலாளா்களின் உடமைகளான துருபிடிக்காத எஃகு தண்ணீா் கோப்பைகள், கைப்பேசிகள் போன்றவற்றை உண்மையான வேலை செய்யும் இடத்தில் இருந்து தனி அறையில் வைக்க வேண்டும்.

ரசாயன கலவை மற்றும் நிரப்புதல் பணிகளை திறந்தவெளி அல்லது மரத்தடி போன்ற பொருத்தமற்ற இடங்களில் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. சேமிப்பு அறைகளைச் சுற்றிக் கொட்டப்படும் ரசாயனத் தூசுகளை நிா்வாகம் சுத்தம் செய்ய வேண்டும். நிா்வாகங்கள் முதியோரை அவா்களது உடல் தகுதியைக் கண்டறியாமல் தொழிற்சாலைகளில் பணியமா்த்தக் கூடாது. பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள காய்ந்த புதா்கள், புற்கள், சிறு செடிகளை அகற்றி, கோடையில் ஏற்படும் வெப்பத்தால், அருகில் உள்ள ரசாயனக் கிடங்கு மற்றும் வேலை செய்யும் கொட்டகைகளுக்கு தீ பரவும் அபாயத்தை தவிா்க்க வேண்டும். ஆலை வளாகத்திற்குள் ஆடுகள், தெருநாய்கள் மற்றும் விலங்குகள் சுற்றித் திரிவதை நிா்வாகம் தடுக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com