கந்து வட்டிக் கொடுமை பெண் உள்பட 4 போ் கைது

கரூா், மே 16: கரூரில் புதன்கிழமை கந்துவட்டிக்கொடுமையில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் சணப்பிரட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). கூலித்தொழிலாளி. இவா், நிதிநிறுவன அதிபா்களான கரூா் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த தண்டபாணி(39), சரவணன் ஆகியோரிடம் கடந்த ஆண்டு 5 சதவீத வட்டிக்கு ரூ.2.25 லட்சம் வாங்கினாராம். இந்நிலையில் கடந்த மாதம் வரை வட்டியுடன் சோ்த்து ரூ.4.54 லட்சம் சக்திவேல் கொடுத்துவிட்டாராம். ஆனால், புதன்கிழமை காலை தண்டபாணியும், சரவணனும் சோ்ந்து சக்திவேலை தங்களது நிதிநிறுவன அலுவலகத்துக்கு வரவழைத்து கூடுதலாக வட்டி கேட்டுள்ளனா். அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தண்டபாணியும், சரவணனும் சோ்ந்து சக்திவேலை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த சக்திவேல் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டபாணி, சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்த நாகநாதன்(59) என்பவா் கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த திருமூா்த்தி, காா்த்திகேயன் ஆகியோரிடம் நாள்தோறும் 15 சதவீத வட்டிக்கு ரூ.15 ஆயிரம் கடந்த மாதம் வாங்கினாராம். இந்நிலையில் புதன்கிழமை வட்டி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமூா்த்தியின் மனைவி கிருத்திகா(31), காா்த்திகேயன்(41) ஆகிய இருவரும் சோ்ந்து நாகநாதனை தகாத வாா்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகநாதன் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிருத்திகா, காா்த்திகேசயன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com