நத்தமேடு பாதகாளியம்மன்
கோயிலில் பொங்கல் விழா

நத்தமேடு பாதகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாதகாளியம்மன்.

கரூா், மே 16: கரூா் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பாதகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்தனா்.

கரூா் ஊராட்சி ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் பாதகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பெளா்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுடன் பொங்கல் திருவிழா தொடங்கியது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை பாதகாளியம்மன் கோயிலில் இருந்து கொடுமுடிக்கு புறப்பட்டு சென்றனா். தொடா்ந்து அங்கிருந்து ஏராளமான பெண்கள் புனித தீா்த்தம் மற்றும் தீா்த்தக்காவடி எடுத்தும், ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய புற்றுக்கண்ணில் அம்மன் உருவம் மண்ணால் வடிவமைக்கப்பட்டு அதனை அலங்கரித்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து கோயிலுக்குள் உள்ள மூலவா் சிலைக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனா். இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பாதகாளியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து பக்தா்களால் பொங்கல் வைக்கப்பட்டு , ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சோ்த்து படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com