கரூா் காவிரிக் கரைகளில் 10 லட்சம் பனைவிதைகள் நடும்பணி: ஆட்சியா்
கரூா் மாவட்டத்தில் காவிரிக்கரையில் 10 லட்சம் பனை விதைகள் நடப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
காவிரிக் கரையோரப் பகுதிகளில் பனைவிதைகள் நடும் பணிக்காக பனை விதைகள் மாவட்டம் முழுவதும் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கடவூா் வட்டம் பாலவிடுதி ஊராட்சி குரும்பப்பட்டியில் பனைவிதைகள் சேகரிக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்டஆட்சியா் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் ஆட்சியா் மேலும் தெரிவித்தது:
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் போன்றவை இணைந்து ஒருங்கிணைத்து காவிரிக்கரையில் ஒருகோடி பனைவிதைகள் நடும் பணி கடந்த ஜூலை 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் துவங்கியது.
செப்டம்பா் 1-ஆம் தேதி தமிழகம் முழுக்க பனைவிதைகள் சேகரிப்பும், அவற்றைத் தொடா்ந்து, செப்டம்பா் மாதம் 5 கட்டங்களாக பனைவிதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இரு பக்கங்களிலும் 416 கி.மீ. தொலைவிற்கு நடப்பட உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தில் 10 இலட்சம் பனை விதைகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரகவளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் இராஜவேலு, கரூா் விதைகள் அறக்கட்டளை சந்துரு, பசுமைத் தோழா் கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், சுரேஸ்குமாா், வட்டாட்சியா் இளம்பருதி மற்றும் வனத்துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.