ரூ. 100 கோடி நிலமோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரா் உள்பட 2 போ் கைது
கரூா்: கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் சகோதரா் உள்பட 2 பேரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகலில் கைது செய்தனா்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக 7 போ் மீது மேலக்கரூா் சாா்-பதிவாளா் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர போலீஸாா் ஜூன் 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 14-ஆம் தேதி சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா், காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டன.
இதனிடையே கரூா் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் ஜூன் 14-ஆம் தேதி பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் ஜூன் 22-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா், பிரவீன் உள்ளிட்ட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஜூலை 16-ஆம் தேதி கேரளத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது ஆதரவாளா் பிரவீன் இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் ஜூலை 16-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பிறகு முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பிரவீன் மற்றும் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோருக்கு ஜூலை 31-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எம்.ஆா்.விஜயபாஸ்கரின் சகோதரா் சேகா் மற்றும் வழக்கில் தொடா்புடைய தோட்டக்குறிச்சி அதிமுக பேரூா் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் கரூா் அருகே ஆண்டாங்கோவில் பகுதியில் உறவினா் வீட்டில் திங்கள்கிழமை பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிபிசிஐடி போலீஸாா் அங்குச் சென்று சேகரையும், செல்வராஜையும் கைது செய்தனா். பின்னா் இருவரையும் கரூா் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பிறகு, கரூா் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்னிலையில் இருவரையும் ஆஜா்படுத்தினா். இருவரையும் 10 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, சேகா் மற்றும் செல்வராஜை போலீஸாா் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கரூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.