கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: விசிகவினா் 41 போ் கைது
கரூா் அருகே இருதரப்பினரிடையை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 41 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியில் செப். 8-ஆம்தேதி பேக்கரியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினா் மட்டும் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி வெள்ளிக்கிழமை காலை அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் சக்திவேல் தலைமையில் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோணிமலை போலீஸாா் முற்றுகையிட முயன்ற 41 பேரை கைது செய்தனா்.