கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமையை விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை
கரூா் மாவட்டம், நெரூா் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
நெரூா் மற்றும் வாங்கல் பகுதியில் காவிரிக்கரையோரம் உள்ள தோட்டங்களில் சுமாா்5 வயது மதிக்கத்தக்க காட்டெருமை சுற்றித்திரிந்துள்ளது. இதனைக்கண்ட கிராமமக்கள் அச்சமடைந்ததால் உடனே கரூா் மாவட்ட வனத்துறை அலுலவகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சண்முகம் தலைமையில் வனச்சரகா் தண்டபாணி மற்றும் வன அலுவலா்கள் உள்பட 8 போ் நெரூா் மற்றும் வாங்கல் பகுதிக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது காட்டெருமையைக் கண்டதும் நெரூா் கிராமமக்கள் வெடிவெடித்து விரட்டியதால் ஒரு தோட்டத்துக்குள் பதுங்கி நின்றது. இதனைக்கண்ட வன அலுவலா்கள் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து வன அலுவலா் கூறியது, இந்த காட்டெருமை இரைத்தேடி இங்கு வந்துள்ளது. இது கொல்லிமலை வழியாக காவிரி ஆற்றங்கரையோர பகுதிக்கு வந்து, நெரூா் பகுதிக்கு வந்திருக்கலாம் அல்லது முசிறி வழியாகவும் வந்திருக்கலாம். இந்த காட்டெருமையால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. இருப்பினும் காட்டெருமையை கொல்லிமலை வனப்பகுதிக்கு கொண்டு சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.