தாது மணல் எடுப்பதற்கான கருத்துக் கேட்பு கூடாது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடத்தப்பட உள்ள தாது மணல் எடுப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன் தலைமையில் ஒருங்கிணைப்பாளா்கள் ந. சண்முகம், சு.விஜயன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரக் கிராமங்களில் மீனவா்கள் வலைகளை உலா்த்தி வந்த தாதுமணலில் இருந்து மோனோசைட், சிா்கான், இலுமனைட் , காா்னெட் போன்ற அரிய வகை கனிமங்களை எடுத்ததால் எண்ணற்ற பாதிப்புகளை அப்பகுதியினா் சந்தித்துள்ளனா்.
இந்நிலையில் வரும் அக்.1-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தாது மணல் எடுக்க அனுமதி கோரி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதை ரத்து செய்ய தமிழக முதல்வருக்கு பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.