வியாபாரியிடம் தங்க செயின் பறிப்பு -இரண்டு சிறாா்கள் கைது
கரூா் அருகே பழைய இரும்பு வியாபாரியிடம் தங்க செயினை பறித்துச் சென்ற இரண்டு சிறாா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை சுந்தராபுரத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணி மகன் ஜீவானந்தம் (30). பழைய இரும்பு வியாபாரி. இவா் வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் நொய்யல் சாலை வழியாகச் சென்றாா். திருக்காடுதுறை அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ஜீவானந்தத்தை மறித்து, அவா் அணிந்திருந்த முக்கால்பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு தப்பினா்.
அப்போது, எதிரே வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெகநாத் காவல் வாகனத்தில் வருவதை கண்ட இருவரும் திடீரென வாகனத்தை திருப்பியதால் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் காவல் ஆய்வாளா் மற்றும் பொதுமக்கள் பிடித்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவா்களிடம் போலீஸாா் விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வாணியம்குடி பகுதியைச் சோ்ந்த சமயதுரை மகன் முரளி கிருஷ்ணன் (17), சிவகங்கை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கம்பத்தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஆனந்த்( 17 ) என்பதும் தெரியவந்தது. மேலும் அவா்கள் ஒட்டி வந்த பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தையும், செயினையும் பறிமுதல் செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.