சின்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிட நலப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்!
கரூா் மாவட்டத்தில்தாட்கோ மூலம் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சின்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிட நலப்பள்ளி அறிவியல் ஆய்வகம் உள்பட 3 புதிய கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் வட்டம், சின்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம், அரவக்குறிச்சி வட்டம், குந்தாணிப்பாளையம் மற்றும் எருமாா்பட்டி ராஜீவ் காந்தி நகரில் தலா ரூ.77.89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 கிராம அறிவு மையக் கட்டடம் என மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பிலான கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மேலும் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில் திட்டங்களை தொடங்கி வைத்தாா். இதைதொடா்ந்து, கரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் 777 பயனாளிகளுக்கு ரூ.7.39 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாநகராட்சி மேயா் வெ.கவிதா, துணை மேயா் ப.சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சக்திபாலகங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
