கிறிஸ்துமஸ் பண்டிகை: கரூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக் காலங்களை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் கரூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூா் மற்றும் மைசூா்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி கா்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து மத்தூா், சென்னப்பட்டணா, ராமநகரம், கெங்கேரி, கேஎஸ்ஆா் பெங்களூரு சிட்டி, பெங்களூரு கண்டோன்மென்ட், ஒசூா், தா்மபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வரை செல்லும் மைசூரு - தூத்துக்குடி சிறப்பு ரயில் வரும் 23, 27-ம்தேதிகளில் மாலை 6.35 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
இதேபோல, தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து வரும் 24, 28-ஆம் தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
