கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2-ஆவது நாளாகஆய்வு
கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக 3டி ஸ்கேனா் கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், சம்பவம் குறித்து முதன்முதலாக வழக்குப்பதிவு செய்த கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, சிபிஐ குழுவைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா் பிரவீண்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்குமாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை வேலுச்சாமிபுரத்துக்குச் சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் உள்ள வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து ‘போரோ போகஸ்’ எனும் மக்கள் அடா்த்தியை 3டி கோணத்தில் அளவீடு செய்யும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனா்.
இந்நிலையில், 2-ஆவது நாளாக சனிக்கிழமை வேலுச்சாமிபுரத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனா் கருவியுடன் ஆய்வு செய்தனா். ஏற்கெனவே சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய அறிக்கை மற்றும் பொதுமக்கள் அளித்த பல்வேறு வாக்குமூலங்கள் அடிப்படையிலும், விடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் அவற்றை ஒப்பீடு செய்வதற்காக விடியோ ஆதாரங்களை மிகத் துல்லியமாக ஒப்பீடு செய்யும் 3டி லேசா் ஸ்கேனா் கருவியை பயன்படுத்திஆய்வு செய்தனா். இந்த ஆய்வுப் பணி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
ஆய்வுப் பணிக்காக அப்பகுதியை போலீஸாா் தடுப்புகளால் அடைத்திருந்தனா். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

