கரூரில் தொழிற்சாலை கழிவுகளுக்கு தீ வைப்பு
கரூா் அருகே தொழிற்சாலை கழிவுகளில் மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூா் மாவட்டம், ஆத்தூா் சமத்துவபுரம் அருகில் கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் தொழிற்சாலை ஒன்றிலிருந்து முறையாக அப்புறப்படுத்தாத கழிவுகளை கொட்டி மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்துள்ளனா்.
இதில், இருந்து வெளியேறிய புகை வானில் பல அடி தூரத்திற்கு தெரிந்ததால், அச்சமடைந்த அப்பகுதியினா் உடனே கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடனே தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனா்.
இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், தீப்பற்றி எரிந்த பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கிடங்கிற்கு உயரழுத்த பைப் லைன் செல்கிறது. இதுபோன்று கழிவுகளில் தீ வைக்கும்போது, பெட்ரோலிய பைப்பில் தீ பிடித்தால் பெரும் விபத்து ஏற்படும்.
எனவே இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க பயன்படுத்தாக குவாரியில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

